திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.99 திருக்கோடிகா - திருவிராகம்
பண் - நட்டராகம்
இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
1
அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினார் கோடிகாவு சேர்மினே.
2
துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.
3
பண்டுசெய்த வல்வினை பற்றாக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.
4
முன்னைநீர்செய் பாவத்தால் மூர்த்தியாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.
5
ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்
கால்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.
6
ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினானர் கோடிகாவு சேர்மினே.
7
மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.
8
மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.
9
தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.
10
கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
செந்தழ லுரவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com